சாலையோர மரத்தில் லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி
தரகம்பட்டி அருகே சாலையோர மரத்தில் லாரி மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
எம்.சாண்டு மணல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா தொட்டியபட்டி ஆனந்தாவூரை சேர்ந்தவர் சோலைமலை. இவருடைய மகன் அழகர் (வயது 22), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கனிமொழி (19). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில், சங்கிகவுண்டன்பட்டியை சேர்ந்த மணிமுத்து (28), அதே ஊரை சேர்ந்த பொன்னா கவுண்டர் மகன் பொன்னுசாமி (23) ஆகியோருடன் அழகர் கரூர் அருகே எம்.சாண்டு மணலை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர். லாரியை மணிமுத்து ஓட்டி சென்றார்.
புதுமாப்பிள்ளை பலி
நேற்று காலை 5 மணியளவில் தரகம்பட்டி அருகே திருச்சி- பாளையம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த புதுமாப்பிள்ளை அழகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பொன்னுசாமியை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதையடுத்து, அழகர்சாமி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.