புகார் பெட்டி


புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939048888 என்ற ‘வாட்ஸ்- அப்’ எண்ணில் வந்து உள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

புதர் மண்டி கிடக்கும் பூங்கா

ஈரோட்டில் மக்களின் பொழுதுபோக்கு தலமாக வ.உ.சி. பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் புதர் மண்டி கிடப்பதால் பொதுமக்கள் பூங்காவுக்கு செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திவ்யா, ஈரோடு.

பணியை முடிக்க வேண்டும்

ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டனர். இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை வடிகாலை அமைக்கும் பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், குறிஞ்சி நகர்.


சாக்கடையில் அடைப்பு

டி.என்.பாளையம் அருகே உள்ள புஞ்சைத்துறையம்பாளையம் கல்லறைமேடு மகுடேஸ்வரர் நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இதில் கடந்த 6 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து ரோட்டில் ஆறு போல் செல்கிறது. எனவே சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைத்துறையம்பாளையம்.


ஆபத்தான மின்கம்பங்கள்

சத்தியமங்கலம் அருகே புதுப்பீர்கடவு கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்பட 3 இடங்களில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. காரைகள் பெயர்ந்து கம்பிகள் எலும்புக்கூடு போல் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பங்கள் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் பேராபத்து ஏற்படலாம். உடனே 3 மின் கம்பங்களையும் மாற்றி தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.சசிகுமார், புதுப்பீர்கடவு, சத்தியமங்கலம்.

பாராட்டு

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள ஒரு உண்டியல் பாதுகாப்பின்றி ரோட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உடனே ரோட்டில் இருந்த கோவில் உண்டியலை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து பூட்டு போட்டு்ள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கிருஷ்ணன், அந்தியூர்.Next Story