புகார் பெட்டி
புகார் பெட்டி
மின்விளக்குகள் ஒளிருமா?
பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு பகுதிக்கு அருகே உள்ள மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் நுழைவு வாயில் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. உடனே மின்விளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெருந்துறை.
ரோடு சீரமைக்கப்படுமா?
ஈரோடு பெரியவலசுவில் இருந்து முனிசிபல் காலனி வரையுள்ள சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. ஆழ்துளை மின் இணைப்புக்காக தோண்டப்பட்ட ரோடு சரியாக சீரமைக்கப்படவில்லை. மண் குவியல் போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே ரோட்டில் மேடு, பள்ளமுமாக காணப்படுகிறது. மழை பெய்யும்போது மண் குவியல் உருகி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், பெரியவலசு.
வீணாகும் குடிநீ்ர்
ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ரோட்டில் ஆறு போல் ஓடி வருகிறது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், ஈரோடு.
ஆபத்தில் கான்கிரீட் வீடுகள்
வெள்ளித்திருப்பூர் அருகே உள்ளது முத்துக்கவுண்டன்புதூர் வில்லமரத்தூர் அருந்ததியர் தெரு. இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் மேற்கூரைகளில் உள்ள கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் வீடுகள் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதனால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் ஏற்படலாம். அதற்கு முன்பு இந்த வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை விரைவாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குரு செம்பன், ஜம்பை.
சாயும் நிலையில் மரம்
புளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் பொன்னம்பாளையம் என்ற இடத்தில் ஒரு பெரிய வாகை மரம் உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழலாம். அந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. மேலும் வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழலாம். உடனே மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், பொன்னம்பாளையம்.
ஆபத்தான மின்கம்பம்
இக்கரை நெகமம் ஊராட்சிக்கு உள்பட்ட 8-வது வார்டான கெஞ்சனூரில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பேராபத்து ஏற்படலாம். அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இக்கரை நெகமம்.