புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ஈரோடு

பயனில்லா வேகத்தடை

பவானி மேட்டூர் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் மிகவும் குறைந்த உயரத்தில் பயனில்லாத வகையில் வேகத்தடை உள்ளது. இந்த வழியாக அதிக அளவில் காலையும், மாலையும் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரோட்டில் முறையாக வேகத்தடை இல்லாதது ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான உயரத்தில் அந்த ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், பவானி.

பஸ் வசதி வேண்டும்

ஈரோடு ரங்கம்பாளையம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், முத்தம்பாளையம் வீட்டு வசதி திட்டம் பகுதி-7 அமைந்து உள்ளது. இங்கு குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பாக சுமார் 250 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்கள் தினமும் ரங்கம்பாளையம், கே.கே.நகர் நுழைவுவாயில் பகுதிகளுக்கு சென்று பஸ் ஏறி செல்லவேண்டியது உள்ளது. எனவே இந்த பகுதி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் பயன்படும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.

பொதுமக்கள், முத்தம்பாளையம்.

ஆபத்தான குழி

ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. பலர் காயம் அடைகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த குழியில் ஒரு குச்சியையும், மரக்கிளைகளையும் வைத்து உள்ளனர். எனவே ஆபத்தான இந்த குழியை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

விரைந்து முடிக்கவேண்டும்

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்திரோடு செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டது. அதன்பின்னர் அந்த ரோட்டில் தார் சாலை போடவில்லை. இதனால் குழிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே இந்த ரோட்டில் தார்சாலை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், ஈரோடு

வழிநெடுகிலும் குப்பை

ஈரோட்டை அடுத்த சோலாரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து சற்று தூரத்தில் ஈரோடு-கரூர் ரோட்டோரம் வழிநெடுகிலும் குப்ைப கொட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டுவந்து குப்பைகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள். மேலும் இந்த குப்பைகளுக்கு தீயும் வைத்துவிடுகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டோரம் குப்பை கொட்டப்படுவதை தடுப்பார்களா?

அருள்முருகன், ஈரோடு.

சாக்கடையால் துர்நாற்றம்

ஈரோடு பஸ்நிலையம் அருகே நாச்சியப்பா வீதியில் நகராட்சி மண்டபத்தை ஒட்டி செல்லும் சாக்கடையில் மண், கழிவுகள் கொட்டப்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும்போதே கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியுள்ள சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெகநாதன், ஈரோடு

ஆபத்தான வளைவு

கருமாண்டம்பாளையத்தை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் காலிங்கராயன் வாய்க்கால் அருகே ஈரோடு-கரூர் ரோட்டில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த இடத்தில் ஆபத்தான வளைவு உள்ளது என்ற எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே விபத்தை தடுக்க அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

ராமச்சந்திரன், சோலார்.

புகார் பெட்டி


Next Story