புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x

புகாா் பெட்டி

ஈரோடு

தார்சாலையாக மாற்றப்படுமா?

கோபி கலிங்கியத்தில் இருந்து வி.ஐ.பி. முத்து நகர் செல்லும் பாதை கடந்த 5 ஆண்டுகளாக மண் பாதையாகவே உள்ளது. இதனால் பாதசாரிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. அந்த வழியாக. இருசக்கர வாகனங்கள் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மண்பாதையை தார்சாலையாக மாற்றுவார்களா?

கவின், எல்.கள்ளிப்பட்டி.

பாலத்தை சீரமைக்க வேண்டும்

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பி.மேட்டுபாளையம் அருகே பொன்னாச்சி புதூரில் உள்ள வாய்க்காலின் குறுக்கே பாலம் செல்கிறது. இதன் தடுப்பு சுவர் நீண்ட நாட்களாக உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவறி வாய்க்காலில் விழும் நிலை உள்ளது. எனவே பாலத்தை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கு.தியாகராஜன், கோபிசெட்டிபாளையம்.

கழிவுகளை அள்ள வேண்டும்

ஈரோடு பெரியவலசு திலகர் வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் இருந்து கடந்த பல நாட்களுக்கு முன்பு கழிவுகள் அள்ளப்பட்டு வெளியே போடப்பட்டது. ஆனால் கழிவுகள் அள்ளப்படாமல் அங்கேயே கிடக்கிறது. இதனால் அந்த இடம் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. மீண்டும் சாக்கடைக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை கழிவுகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

ஆபத்தான மின்கம்பம்

கோபிசெட்டிபாளையம் புதுக்காடு அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் சின்னச்சாமி 3-வது வீதி அருகே மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நஞ்சகவுண்டன்பாளையம்.

சாலையில் தேங்கும் சாக்கடை

ஈரோடு மாநகராட்சி 11-வது வார்டு செங்கோடம்பாளையம் டெலிபோன் சிட்டிக்கு செல்லும் ரோட்டில் சாக்கடை தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக இங்கு சாக்கடை தேங்கி இருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்பவர்கள் மீது சாக்கடை தெறித்து ஆடைகள் மீது படுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் உற்பத்தியாகின்றன. எனவே சாக்கடையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், செங்கோடம்பாளையம்.

உடையும் பாதாளசாக்கடை மூடிகள்

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு மூடிகள் பொருத்தப்படுகின்றன. அப்படி பொருத்தப்படும் மூடிகள் தரமில்லாமல் பொருத்தப்படுவதால் அவை உடைந்து விபத்துகள் ஏற்படுகின்றன. ஈரோட்டில் ஜீவா நகர் பகுதி, ரங்கம்பாளையம் (ரெயில் நகர் அருகே) பகுதிகளில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து கிடந்தன. இதுபற்றிய புகார்களின் பேரில் சரி செய்யப்பட்டது. ஆனால் சரி செய்யப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மீண்டும் மூடிகள் உடைந்து விட்டன. மிகவும் தரம் குறைந்த மூடிகளை பொருத்துவதால் இதுபோன்று பிரச்சினை ஏற்படுகிறது. எனவே சரியான மற்றும் தரமான மூடிகள் போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஜீவாநகர்-ரெயில் நகர்.


Next Story