குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை
உடுமலை நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாகச்சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து சேகரித்து வருகின்றனர். இந்த குப்பைகளில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம்தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் நகராட்சி பகுதியில் பல இடங்களில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதி புகைமண்டலமாகிறது.
அத்துடன் சாலையில் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் செல்கிறவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆபத்தை உணராமல் மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளுக்கு (டிரான்ஸ்பர்மர்) அருகிலும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. அதனால் குப்பைகளை சாலையோரம் கொட்டி தீ வைக்கப்படுவதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.