உலக புலிகள் தின விழா
உடுமலை அடுத்த பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக உலகப் புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நா.கணேசன் தலைமை தாங்கினார்.இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் வரவேற்றார்.தொழிற்கல்வி ஆசிரியர் கே.செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கி புலிகளை பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்கு குறித்து கூறினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் சந்திரன் உலக புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க சபதம் ஏற்போம் என்று கூறினார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ.சரவணன் தேசிய விலங்கு புலியும் அதன் தனித்தன்மைகளும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றி புலியின் வாழ்வியல் பற்றி எடுத்துரைத்தார். மேலும் உலக அளவில் இந்தியாவின் புலிகள் அதிகம் உள்ளதால் இந்தியாவின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு உள்ளது என்று புலியின் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.முதுகலை வேதியியல் ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார் சாமி வனவிலங்குகள் காட்டில் நன்றாக இருந்தால் தான் நாட்டில் மக்கள் நலமாக வாழ முடியும் என்று எடுத்து உரைத்தார்.முதுகலை இயற்பியல் ஆசிரியர் எம்.ரத்தினசாமி நன்றி கூறினார். புலிகள் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து மாணவ-மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது. வனங்களுக்குள் வாகனங்கள் செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதையும் அவற்றை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கருத்து அரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் புலிகளையும் வன விலங்குகளையும் பாதுகாக்க மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.