16-ம் நூற்றாண்டு புலிக்குத்திக் கல் வழிபாடு


16-ம் நூற்றாண்டு புலிக்குத்திக் கல் வழிபாடு
x

உடுமலை அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்திக் கல்லை இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

திருப்பூர்

உடுமலை அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்திக் கல்லை இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

புலிக்குத்தி கற்கள்

மேய்ச்சல் நிலங்களும், கால்நடைகளும் அன்றைய வாழ்வியலின் மிகப் பெரிய சொத்தாக இருந்துள்ளது. அன்றைய மக்கள் கால்நடைகளைக் காப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். புலி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து கால்நடைகளைக் காப்பாற்றும் போராட்டத்தில் உயிர் விட்ட வீரர்களின் நினைவாக நடுகல் எழுப்பும் பழக்கம் இருந்துள்ளது.

அந்தவகையில் தளி பாளையக்காரர்களால் ஆட்சி செய்யப்பட்ட உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர், ஜிலோப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் புலிக்குத்திக் கற்கள் மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. மேலும் தளி ஜல்லிபட்டி தெற்கு வீரஜக்கம்மா கோவிலுக்கு செல்லும் வழியில், தனியார் தோட்டத்து சாலையில் கிணற்று மேட்டில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் 2 அடி உயரமும், 1¾ அடி அகலமும் கொண்ட புடைப்புச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இலந்தை மரத்துக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தொல்லியல் ஆய்வாளர்கள்

அந்த புடைப்புச் சிற்பத்தில் ஆபரணங்கள் அணிந்த ஒரு வீரன் புலியின் வாயில் வேலைச் செருகி இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை பொம்ம நாயக்கன் என்றும் புலிக்குத்தி வீரன் என்றும் கூறி வழிபட்டு வருகிறார்கள். இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தீப வழிபாடும் ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளில் சிறப்பு வழிபாடுகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

16 அல்லது 17-ம் நூற்றாண்டில் இந்தப் புடைப்புச் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும், மக்களுக்காகப் பாடுபட்ட ஒரு அரசன் அல்லது தலைவனின் செயலைப் போற்றும் வகையில் இந்தப் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே'

என்பது எட்டுத்தொகை நூலான புறநானூற்றில் மாங்குடி கிழாரின் பாடலாகும்.

சங்க இலக்கியம்

பகைவருடனான போரில் முன் நின்று போரிட்டு ஒளிமிகுந்த தந்தத்தை உடைய யானை மீது வேல் எறிந்து வீழ்ந்தவனுக்கு நடுகல் வைத்து, அதன் மீது நெல் தூவி வணங்கும் முறையைத் தவிர்த்து வேறு கடவுள் இல்லை என்கிறார் புறநானூற்றுப்புலவர். புலியைப் பிடிப்பதற்கும், மக்களை அவற்றிடமிருந்து காப்பாற்றியவர்களுக்காக இவ்வாறான புறநானூற்றுப் பாடல்கள் ஏராளமாக உள்ளது. சங்க இலக்கியப் பாடலில் புலியைத் தாக்கும் கல்லை பெருங்கல் அடார் என்று புறநானூறு 19-ம் பாடல் கூறுவதை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனர்.

இந்த புலிக்குத்தி கல் குறித்து குறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் முனைவர் மதியழகன், கிருஷ்ணாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராபின், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, ஹேனா ஷெர்லி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story