மதுரை கோர்ட்டில் போக்சோ வழக்கில் தண்டனையை கேட்டதும் தப்பிய கைதி சிக்கினார்- எழுமலை பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
போக்சோ வழக்கில் தண்டனையை கேட்டதும் மதுரை கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய கைதி, எழுமலை பகுதியில் போலீசில் சிக்கினார்.
உசிலம்பட்டி
போக்சோ வழக்கில் தண்டனையை கேட்டதும் மதுரை கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய கைதி, எழுமலை பகுதியில் போலீசில் சிக்கினார்.
கைதி தப்பி ஓட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சி.நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு உத்தப்பநாயக்கணூர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கடந்த மாதம் 1-ந்தேதி மதுரை போக்சோ கோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பு கூறினார். சுரேசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்டதும் கோர்ட்டில் இருந்து நழுவி கைதி சுரேஷ், தப்பி ஓடினார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
போலீசில் சிக்கினார்
இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு தலைமையில் தனிப்படை அமைத்தும் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் எழுமலை பகுதியில் சுற்றித்திரிந்த சுரேசை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.