புஞ்சைபுளியம்பட்டியில் பாலீஷ் போட்டு தருவதாக பெண்ணிடம் 7½ பவுன் நகை அபேஸ்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


புஞ்சைபுளியம்பட்டியில் பாலீஷ் போட்டு தருவதாக பெண்ணிடம் 7½ பவுன் நகை அபேஸ்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

புஞ்சைபுளியம்பட்டியில் பாலீஷ் போட்டு தருவதாக பெண்ணிடம் 7½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் பாலீஷ் போட்டு தருவதாக பெண்ணிடம் 7½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை பாலீஷ்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சந்தை ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி மரகதம் (வயது 55). மகன் விவேக். மகள் கீர்த்தனா. விவேக் திருமணமாகி குடும்பத்துடன் கோவை மாவட்டம் அன்னூரில் வசித்து வருகிறார். கீர்த்தனா கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். முத்துசாமி ஏற்கனவே இறந்துவிட்டார்.

இந்தநிலையில் நேற்று வீட்டில் மரகதம் மட்டும் தனியாக இருந்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மரகதத்திடம் குறைந்த செலவில் அனைத்து நகைகளையும் பாலீஷ் போட்டு தருகிறோம். உங்கள் வீட்டில் வெள்ளி, பித்தளை எந்த நகையாக இருந்தாலும் தாருங்கள். நாங்கள் பாலீஷ் போட்டதை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் பணம் தரலாம். இல்லை என்றால் வேண்டாம் என்று கூறினர்.

7½ பவுன் சங்கிலி

இதையடுத்து மரகதம் வீட்டில் வைத்திருந்த ஒரு பித்தளை மோதிரத்தை கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தார். அதை சிறிது நேரத்தில் இருவரும் சேர்ந்து நன்றாக பாலீஷ் போட்டு கொடுத்தனர்.

அதைப்பார்த்து நம்பிய மரகதம் தான் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை கழற்றி இதையும் நன்றாக பாலீஷ் போட்டு கொடுங்கள் என்று வாலிபர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய இருவரும் ஒரு வித பவுடரை நகையில் தடவினார்கள். பின்னர் நன்றாக வெந்நீர் கொதிக்க வைத்து கொண்டு வாருங்கள். பவுடர் தடவியுள்ளோம். வெந்நீரில் அதை போட்டால் நகை புதுசுபோல் மின்னும் என்று கூறினர். அதனால் மரகதம் வெந்நீர் போடுவதற்காக உள்ளே சென்றார்.

வலைவீச்சு

சிறிது நேரத்தில் மரகதம் ஒரு பாத்திரத்தில் வெந்நீரை கொதிக்க வைத்து வெளியே கொண்டு வந்தார். அப்போது வெளியே இருந்த வாலிபர்களை காணவில்லை. பதறி அடித்து அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் மரகதம் பாலீஷ் போடுவதற்காக வந்த வாலிபர்கள் தன்னை ஏமாற்றி நகையை கொண்டு சென்றுவிட்டதை தெரிந்து கொண்டார். உடனே இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரகதத்திடம் நகையை அபேஸ் ெசய்த வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story