புன்னக்காயல் பெண் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்


தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 9:22 AM GMT)

புன்னக்காயல் பெண் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

புன்னக்காயல் பெண் பஞ்சாயத்து தலைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

பஞ்சாயத்து தலைவர்

ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆல்வின். இவரது மனைவி சோபியா(வயது 50). இவர் புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் புன்னக்காயல் கிராமத்திற்கு குடிதண்ணீர் செல்லும் குழாயை, புன்னக்காயல் மறக்குடி தெருவை சேர்ந்த சசின்டோ என்பவர் உடைத்து தன்னுடைய வீட்டு வேலைக்கு அந்த தண்ணீரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் புன்னக்காயல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் சோபியா, குடி தண்ணீர் குழாயை சேதப்படுத்திய புன்னக்காயல் மறக்குடி தெருவை சேர்ந்த சசின்டோ வீட்டிற்கு சென்றுள்ளார்.

தாக்குதல்

அங்கு இருந்த சசின்டோவை குடிதண்ணீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதை சோபியா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சோபியாவை அவதூறாக பேசியதுடன் தாக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்த சசின்டோவின் சகோதரர் ரமேஷ் சோபியாவைத் தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த அவரது நண்பரான தாசன் மகன் கிறிஸ்டியன் என்பவர் சோபியாவின் சேலையை பிடித்து இழுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது சோபியா எழுப்பிய கூச்சலை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். அவர்களை பார்த்தவுடன் சசின்டோ, ரமேஷ், கிறிஸ்டியன் ஆகிய 3 பேரும் தப்பி ஓடிவிட்டனராம்.

ஒருவர் சிக்கினார்

இதுகுறித்து சோபியா அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டியனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சசின்டோ, அவரது தம்பி ரமேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். பஞ்சாயத்து தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் புன்னக்காயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story