மதுபிரியர்களின் அட்டகாசம்...குமுறும் விவசாயிகள்


மதுபிரியர்களின் அட்டகாசம்...குமுறும் விவசாயிகள்
x

மது பிரியர்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

திருப்பூர்

போடிப்பட்டி

மது பிரியர்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

சமூக குற்றங்கள்

குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை ஓரங்கள், வயல்வெளிகள் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மது போதையால் நடைபெறும் சமூக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொது வெளிகளில் மது அருந்துவதை கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். இன்றைய நிலையில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறுவர், சிறுமிகள் கூட மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் உடல் உழைப்பில் ஈடுபடும் பல தொழிலாளர்கள் களைப்பைப் போக்கும் மருந்தாக மதுவை பயன்படுத்துகின்றனர். காலப்போக்கில் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு, மதுபோதையில் வீதியில் விழுந்து கிடக்கும் நிலை உருவாகிறது.

மேலும் தற்போதைய நிலையில் மது அருந்துவதை அவமானமான செயலாக கருதாமல் கெத்து காட்டும் செயலாக கருதும் போக்கு அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானதாகும்.

கண்ணாடித்துண்டுகள்

ரகசியமாக மறைந்து மறைந்து குடித்த பலரும் தற்போது சாலை ஓரங்களில் உள்ள மரத்தடி, வாய்க்கால் திட்டு உள்ளிட்ட பொதுவெளிகளில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடைவதுடன் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். குடிமகன்கள் விளைநிலங்களையும் விட்டு வைக்காமல் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் விவசாய நிலங்களில் அமர்ந்து குடிப்பதுடன் பாட்டில்களை உடைத்து அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர்.

ஆங்காங்கே கிடக்கும் கண்ணாடி துண்டுகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காயமடைவதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் காயமடைகின்றன.அத்துடன் மதுப்பிரியர்கள் பலரும் குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.எனவே பொது இடங்களில் மது அருந்தும் குடிமகன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அனைத்து மதுக்கடைகளுக்கு அருகிலும் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்தும் வகையில் இலவச வசதி செய்து தரவேண்டும் என்பது குடிமகன்களின் கோரிக்கையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.



Next Story