பூ விவசாயிகளை புரட்டி போட்ட புரட்டாசி மாதம்


பூ விவசாயிகளை புரட்டி போட்ட புரட்டாசி மாதம்
x
தினத்தந்தி 11 Oct 2023 11:00 PM GMT (Updated: 11 Oct 2023 11:00 PM GMT)

திருமணம், திருவிழாக்கள் இல்லாததால் விலை கிடைக்காமல் செடிகளில் பூக்கள் வாடிவதங்கும் நிலை ஏற்பட்டு புரட்டாசி மாதம் பூ விவசாயிகளை புரட்டி போட்டுள்ளது.

திண்டுக்கல்

பூக்கள் சாகுபடி

தமிழகத்தில் பூக்கள் சாகுபடி அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் திண்டுக்கல் முக்கியமானது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய 2 இடங்களில் பூ மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டுகளில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அதிலும் கோவில் திருவிழாக்கள், தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதர்த்தி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமண முகூர்த்த நாட்களில் அதிக அளவில் பூக்கள் விற்பனையாகும். மேலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது கேரளாவுக்கு தினமும் 40 டன்களுக்கு குறையாமல் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதுபோன்ற நாட்களில் பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

விற்பனை-விலை சரிவு

இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து பூக்கள் விற்பனை குறைய தொடங்கியது. கோவில் திருவிழா, திருமண விழாக்கள் அதிகமாக இல்லாததால் பூக்களின் விற்பனை குறைந்து, அவற்றின் விலையும் சரிந்தது. வியாபாரிகள், பொதுமக்கள் வராததால் கடந்த 3 வாரங்களாக பூ மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பறித்த கூலிக்கு கூட பூக்கள் விற்பதில்லை. எனவே விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு உள்ளனர். விழாக்களில் மாலைகளிலும், பெண்களின் கூந்தல்களிலும் இதழ் விரித்து சிரிக்க வேண்டிய பூக்கள், செடிகளிலேயே வாடி வதங்கி வருகின்றன.

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கினால் தான் திருமண விழாக்கள் நடைபெறும். அதன்பின்னரே பூக்களுக்கு விலை கிடைக்கும். அதுவரை ஒரு மாத காலம் நஷ்டத்தை சந்திக்க வேண்டியது தான் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் புரட்டாசி மாதம் தங்களை புரட்டி போட்டுவிட்டதால், ஐப்பசி மாதம் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story