அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
x
தினத்தந்தி 31 July 2023 7:15 PM GMT (Updated: 31 July 2023 7:16 PM GMT)

சிங்கம்புணரி அருகே அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.

புரவி எடுப்பு திருவிழா

சிங்கம்புணரி அருகே காப்பாரபட்டியில் பிரசித்தி பெற்ற காப்பார அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரவி எடுப்பு விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி திருவிழா முடிந்ததும் காப்பார அய்யனாருக்கு புரவி எடுப்பு விழா நடைபெறும்.

இந்த ஆண்டு சேவுக பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் கும்பாபிஷேக விழாவிற்காக ஆனி மாதம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது காப்பார அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா ஆடி மாதம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு புரவி செய்வதற்காக சிங்கம்புணரி வேளார் வம்சாவளி குயவர்களிடம் பிடிமண் வழங்கப்பட்டது.

பின்னர் சிங்கம்புணரி வேளார் சமுதாய கூடம் முன்பு உள்ள புரவி பொட்டலில் புரவிகள் செய்யும் பணி தொடங்கியது. இதில் கோவில் சார்பாக கருப்பர் சுவாமி சிலை ஒன்றும், அரண்மனை புரவி இரண்டு என மொத்தம் 5 புரவிகள் தயார் செய்யப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை காப்பாரப்பட்டி கிராமத்தார்கள் இணைந்து சாமி அழைத்து வந்து புரவிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

வழிபாடு

இதைதொடர்ந்து மேளதாளம் வான வேடிக்கைகளுடன் புரவிகளை ஆண்கள் சுமந்து கொண்டும், குழந்தை பொம்மைகள், நாக பொம்மைகளை பெண்கள் சுமந்து கொண்டு சிங்கம்புணரி வேளார் தெருவில் இருந்து மேலத்தெரு வழியாக ஊர்வலமாக சென்று காப்பாரப்பட்டியில் உள்ள மந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இரவில் கலை நிகழ்ச்சிகள் நாடகம் நடைபெற்றன. அதனை தொடர்ந்து காப்பாரப்பட்டி மந்தையிலிருந்து புரவிகள் காப்பார அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை காப்பாரப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story