விவசாயம் செழிக்க வேண்டி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
விவசாயம் செழிக்க வேண்டி சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் பிரசித்த பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் கோவிலில் புரட்டாசி மாதம் நஞ்சை விவசாயம் செழிக்க வேண்டி சிங்கம்புணரி கிராமத்தார்கள் சார்பில் புரவி எடுப்பு விழா நடந்தது. முன்னதாக புரவி செய்யும் வேளார்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்தார்கள் சார்பில் பிடிமண் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளார் புரவி பொட்டலில் சுமார் 7 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மண் புரவிகள் தயாரானது. அதனை தொடர்ந்து நேற்று மாலை கிராமத்தார்கள் ஒன்றிணைந்து வேளார் தெருவில் உள்ள புரவிப் பொட்டலுக்கு வந்தனர். அங்கு சாமி அழைத்து புரவி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புரவி எடுப்பு விழாவுக்காக சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் பூஜகர்கள், சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து சிறப்பு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து கிராமத்தார்கள் புரவியை சுமந்து கொண்டு ஊர்வலமாக சந்திவீரன் கூடத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று இரவு நகரின் முக்கிய வீதிகள் வழியாக புரவிகள் கொண்டு செல்லப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சேவகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கல தேவியருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
ஒவ்வொறு ஆண்டும் இந்த புரவி எடுப்பு திருவிழாவின் போது மழைபெய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விழாவின் போது மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.