ஒரே மாதத்தில் 1,850 டன் பருத்தி ரூ.8 கோடிக்கு கொள்முதல்

செம்பனார்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே மாதத்தில் 1,850 டன் பருத்தி ரூ.8 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
செம்பனார்கோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே மாதத்தில் 1,850 டன் பருத்தி ரூ.8 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
தேசிய மின்னணு சந்தை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது செம்பனார்கோவில் பகுதியில் விவசாயிகள், தங்களது வயலில் சாகுபடி செய்த பருத்தியை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மில் அதிபர்கள்
இதனால் விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி முதல் பருத்தி மறைமுக ஏலம் தொடங்கியது. இதில் மராட்டியம், ஆந்திரபிரதேசம், கர்நாடகா போன்ற வெளிமாநில மில் அதிபர்களும், தேனி, கோவை, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், மதுரை, திண்டுக்கல் போன்ற வெளிமாவட்ட மில் அதிபர்களும் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் பருத்தியை ஏலம் மூலமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
ரூ.8 கோடிக்கு கொள்முதல்
அதன்படி நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மில் அதிபர்களும், வியாபாரிகளும் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். கடந்த ஜூலை மாதத்தில் செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் 1,850 டன் பருத்தி ரூ.8 கோடிக்கு கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பருத்தி அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






