59 ஆயிரத்து 600 கிலோ நெல் கொள்முதல்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒரு மாதத்தில் 59 ஆயிரத்து 600 கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒரு மாதத்தில் 59 ஆயிரத்து 600 கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
நெல் விவசாயம்
ஆனைமலை ஒன்றியத்தில் நெல், தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக 5 ஆயிரத்து 400 ஏக்கரில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதற்கு ஆழியாறு அணையில் இருந்து கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய ஆயக்கட்டு பாசனம், பழைய ஆயக்கட்டு பாசனம் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல் பயிரிட்டனர். தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. வடக்கலூர், அம்மன் கோவில், காக்கா கொத்தி பாறை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1,490 மூட்டைகள்
இந்தநிலையில் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கடந்த 8-ந் தேதி நெல் கொள்முதல் மையம், ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் தொடங்கப்பட்டது. அதில் சன்ன ரகம் கிலோவிற்கு 21 ரூபாய் 60 காசுகளும், பொது ரகம் கிலோவிற்கு 21 ரூபாய் 15 காசுகளும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 12 உலர் கலங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நெற் கதிர்களை உலர வைத்து கொள்ளலாம். தற்போது வரை சன்ன ரகம் 1,490 மூட்டைகளில் 59 ஆயிரத்து 600 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.