தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 7.24 லட்சம் டன் நெல் கொள்முதல்


தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 7.24 லட்சம் டன் நெல் கொள்முதல்
x

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 7.24 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 7 லட்சத்து 24 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,539 கோடி பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவுகுறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

அதன்படி கடந்த ஆண்டு முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவில் நடைபெற்றது. தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மொத்த சாகுபடி பரப்பான 1 லட்சத்து 38 ஆயிரத்து 905 எக்டேரில் இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரத்து 71 ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 834 ஏக்கர் அளவில் அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்கள்

அறுவடை பணிகள் நடைபெற்றதையொட்டி அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. வழக்கமாக நடப்பு பருவம் என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதியுடன் நிறைவடையும். ஆனால் நடப்பு பருவத்தில் செப்டம்பர் மாதம் 1-ந்தேதியே நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு கொள்முதல செய்யப்பட்து.

அதன்படி குறுவை பருவத்தில் 391 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் நடைபெற்றன. குறுவை பருவத்தில் மட்டும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 515 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் தற்போது 19 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஏ கிரேடு நெல் ரூ.2,160-க்கும், பொது ரகம் ரூ.2,115-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. சம்பா, தாளடி பருவத்தில் அதிக பட்சமாக 608 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

7.24 லட்சம் டன் கொள்முதல்

அதன்படி நேற்று வரை 5 லட்சத்து 2 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை முடிந்த பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது 223 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு குறுவை மற்றும் சம்பா இரண்டும் சேர்த்து இதுவரை 7 லட்சத்து 21 ஆயிரத்து 515 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 560 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நெல்லுக்கு உரிய தொகையாக ரூ.1,539 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்று தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிப கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story