824 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல்
824 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல்
ஆனைமலை
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரி உள்பட 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 1-ந் தேதி கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இதில் அரவை கொப்பரை கிலோவிற்கு 108 ரூபாய் 60 காசுகளும், பந்து கொப்பரை கிலோவிற்கு 117 ரூபாய் 80 காசுகளும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஏக்கருக்கு 291 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஆனைமலை ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் 16 ஆயிரத்து 479 மூட்டைகளில் ஒரு மூட்டை 50 கிலோ விதம் 823.950 மெட்ரிக் டன் அரவை கொப்பரை தேங்காயை வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.8 கோடியே 94 லட்சத்து 89 ஆயிரத்து 500 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.