விவசாயிகளிடம் ரூ.20 கோடிக்கு கொப்பரை கொள்முதல்


விவசாயிகளிடம் ரூ.20 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
x
தினத்தந்தி 26 May 2023 7:30 PM GMT (Updated: 26 May 2023 7:30 PM GMT)

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 3 மாதங்களில் விவசாயிகளிடம் இருந்து ரூ.20 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 3 மாதங்களில் விவசாயிகளிடம் இருந்து ரூ.20 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

தென்னை விவசாயம்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 15 லட்சத்து 60 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் பறிக்கப்படும் தேங்காய், இளநீர் ஆகியவை திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைக்கப்பட்டு கொப்பரைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் ஆர்வம்

இந்த நிலையில் தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோயில் போன்ற வெளிமார்கெட்டில் தற்போது அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை கொள்முதல் விலையை விட கிலோவிற்கு சுமார் ரூ.28 வரை விலை குறைவாக கிடைக்கிறது. இதனால் சுல்தான்பேட்டை வட்டார தென்னை விவசாயிகள் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்களது கொப்பரைகளை விற்பனை செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

37,110 மூட்டைகள்

செஞ்சேரி(மலையடிபாளையம்) ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று வரை 1,401 விவசாயிகளிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 37 ஆயிரத்து 110 கொப்பரை மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.20 கோடியே 15 லட்சத்து 730 ஆகும். இந்த தகவலை ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.


Next Story