கிலோ ரூ.50-க்கு பருத்தி கொள்முதல்


கிலோ ரூ.50-க்கு பருத்தி கொள்முதல்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பருத்தி விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பருத்தி, மிளகாய் விவசாயம்தான் அதிகமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் 10,000 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய கிராமங்களில் இந்த ஆண்டு பருத்தி விவசாய சீசன் முடிந்து விட்டது. ஒரு சில கிராமங்களிலும் செடிகளில் காய்த்துள்ள பருத்திப்பஞ்சுகளை பறித்து வியாபாரிகளிடம் கொடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீசன் முடிய உள்ள நிலையில் கருமல், மட்டியாரேந்தல், தாழியாரேந்தல் பூசேரி, செங்கற்படை உள்ளிட்ட பல கிராமங்களிலும் வயல் பகுதிகளில் செடிகளில் காய்த்துள்ள பருத்திப்பஞ்சுகளை பறித்து அந்த பஞ்சுகளை வியாபாரிகளிடம் கொடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருத்தி பஞ்சின் விலை குறைந்து விட்டதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

விலை குறைவு

இதுகுறித்து தாழியாரேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி மிக்கேல் கூறும்போது, கடந்த ஆண்டு பருத்தி விளைச்சல் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. 1 கிலோ பருத்தி ரூ.110-ல் இருந்து 120 வரை விலை போனது. இந்த ஆண்டு பூச்சி தாக்குதலால் பருத்தி விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ரூ.80 வரை விலை போன பருத்தி தற்போது ரூ.45-ல் இருந்து ரூ.50-க்கு மட்டும்தான் விலை போகின்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விளைச்சலும், விலையும் குறைந்துவிட்டது. கஷ்டப்பட்டு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பருத்தி பஞ்சுகளை வருகின்ற ஆண்டில் அரசே நேரடியாக கொள்முதல் செய்து நல்ல விலை கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு பருத்தி விவசாயம் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் முழுமையாக பருத்தி விவசாயம் முடிந்து விடும் என்று கூறினார்.


Next Story