உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு கொள்முதல்


உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு கொள்முதல்
x
தினத்தந்தி 1 Aug 2023 7:30 PM GMT (Updated: 1 Aug 2023 7:31 PM GMT)

நீலகிரியில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

உருளைக்கிழங்கு சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2,000 ஹெக்டேர் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 700 ஹெக்டேர் தான் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக தொடர் மழை பெய்தது. இடைவிடாது பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள உருளைக்கிழங்குகளின் தோல் உரிந்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதை சமாளிக்க விவசாயிகள் மருந்து தெளித்து வருகின்றனர். இதனால் செடிகள் அதிகமாக கருகுகிறது. மேலும் சாகுபடி செலவும் அதிகரிக்கிறது.

கொள்முதல் விலை குறைவு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உருளைக்கிழங்குக்கு ஏக்கருக்கு சாகுபடி செலவாக ரூ.2½ லட்சம் ஆவதால், பெரும்பாலானவர்கள் உருளைக்கிழங்கு சாகுபடியை கைவிட்டு விட்டனர். பயிர் சுழற்சிக்காக மட்டும் 5 ஆண்டுக்கு ஒரு முறை உருளைக்கிழங்கு சாகுபடி செய்கின்றனர். அதிகமான சாகுபடி செலவு பிரச்சினை ஒருபுறம் இருக்க, தற்போது தொடர் மழையால் உருளைக்கிழங்கு தோல் உரிகிறது. வரத்து குறைவு காரணமாக உருளைக்கிழங்கு கிலோவுக்கு ரூ.60 வரை நன்றாக விலை கிடைத்து வந்தது.

கடந்த வாரம் உருளைக்கிழங்கு கிலோ ரூ.70-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இந்தநிலையில், உருளைக்கிழங்குகளில் தோல் உரிந்து விளைச்சல் பாதித்ததால் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 குறைவாக கிடைக்கிறது. ஏனென்றால் தோல் உரியாத உருளைக்கிழங்குகளை தான் 4 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும். தோல் உரிந்தால் ஒரு மாதத்திற்குள் அதன் சுவை மாறிவிடும். எவ்வளவு மழை பெய்தாலும் பகலில் 4 முதல் 6 மணி நேரம் வெயில் அடித்தால் மட்டுமே உருளைக்கிழங்கு பயிர்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story