தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூடலூர், மசினகுடி, ஓவேலி பகுதிகளில் தூய்மை பணிகள் தீவிரம்


தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூடலூர், மசினகுடி, ஓவேலி பகுதிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:45 AM GMT (Updated: 12 Jun 2023 12:45 AM GMT)

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூடலூர், மசினகுடி, ஓவேலி, நடுவட்டம் பகுதியில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூடலூர், மசினகுடி, ஓவேலி, நடுவட்டம் பகுதியில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

மக்கள் இயக்கம்

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு ஆனதை கொண்டாடும் வகையில் கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் இரும்பு பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். கூடலூர் ஆர்டிஓ முகமது குதரதுல்லா, நகர சபை தலைவர் பரிமளா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றினர்.

இதேபோல் ஓவேலி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மை பணிக்கு செயல் அலுவலர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத் தலைவர் சகாதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாலவாடி, பெரிய சூண்டி, கியாஸ் குடோன், பர்ன் சைடு பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அகற்றி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

நடுவட்டம், மசினகுடியில் தூய்மை பணி

இதேபோல் நடுவட்டம் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் பிரதீப் குமார், தலைவர் கலியமூர்த்தி, துணைத் தலைவர் துளசி மற்றும் தூய்மை பணியாளர்கள் பைக்காரா முதல் இந்திரா நகர் வரை தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தேவர்சோலை பேரூராட்சியில் நடைபெற்ற பணியில் செயல் அலுவலர் பிரதீப் குமார் (பொறுப்பு) தலைமை தாங்கினார். ஆர்டிஓ முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 -வது மைல் முதல் 9-வது மைல் வரை பொது இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் மக்காத குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மசினகுடி ஊராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சி தலைவர் மகாதேவி மோகன் தலைமை தாங்கினார். கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் நாகேஷ், ஊராட்சி செயலர் கிரண் முன்னிலை வகித்தனர். மசினகுடி பஜார் தொடங்கி மாயாறு செல்லும் சாலையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story