அனைத்து வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம்
விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளிலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மாதவன் தெரிவித்தார்.
விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளிலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் மாதவன் தெரிவித்தார்.
36 வார்டுகள்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. சமீபகாலமாக ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து கிடைக்கும் குடிநீர்உப்பு மிகுந்ததாக உள்ள காரணத்தால் பல வார்டுகளில் பொதுமக்கள் உப்பு தண்ணீர் வினியோகிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக கூடுதல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் முடிந்த பின்பு அனைத்து வார்டுகளிலும் தாமிரபரணி தண்ணீர் வினியோகிக்க கூடுதல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனினும் விருதுநகர் பழைய பஸ் நிலையம் மற்றும் அனைத்து வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது.
குடிநீர் வழங்கும் மையம்
இதனைத்தொடர்ந்து அனைத்து வாா்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் நமக்கு நாமே திட்டத்திற்காக ரூ. 25 லட்சம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 வார்டுகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் தொடங்கப்படும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர் பழைய பஸ் நிலையத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.