புருஷோத்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
அம்பை புருஷோத்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அம்பை:
அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதியின் வடது புறத்தில் வயல்களின் நடுவில் அமைந்துள்ள அலமேலுமங்கை தாயார் சமேத புருஷோத்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. 22-ந் தேதி மாலையில் கோவிலின் பின் உள்ள பொங்கு கரை தீர்த்தத்தில் தீர்த்தம் எடுத்து அம்பை மெயின் ரோடு, பூக்கடை பஜார் புதுக்கிராமம் தெரு, மேலப்பாளையம் தெரு வழியாக கோவிலுக்கு வந்தடைந்தது. தீர்த்த குடத்திற்கு முன்பாக சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தர்கள், உலகாம்பிகை மகளிர் வழிபாட்டு குழு, மாணிக்கவாசகர் வழிபாட்டு குழுவினர்கள் இணைந்து பக்தி பஜனை பாடல்களுடன் தீர்த்தக்குடம் கோவிலை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 6.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேக உபயதாரர் கண்ணன் பிரேமா குடும்பத்தினர்கள், கோவில் இன்ஸ்பெக்டர் கோமதி, செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், முருகன், பாரதி, இனங்குமரன், அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி. பிரபாகரன், யூனியன் சேர்மன் பரணி சேகர், மெரிட் கல்வி குழும தாளாளர் சுப்பிரமணியன், முதல்வர் நாகலட்சுமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் பண்ணை சந்திரசேகரன், வாசுதேவ ராஜா, சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன், மற்றும் காசிநாதர் பக்தர்கள் பேரவையினர், அய்யப்ப சேவா சங்கத்தினர், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நாமத்வார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமிவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.