கந்தசஷ்டி விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி
கந்தசஷ்டி விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. தினமும் முருகபெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்க கவசம், திருவாபரணம், சந்தன காப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கந்த சஷ்டி விழாவின் 5-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் முருகபெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சண்முக பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
திருக்கல்யாண விழா
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன், திருத்தணி மலையில்தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம். அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உற்சவர் முருகபெருமானுக்கு திருக்கல்யாண திருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை முருகன் கோவில் தக்கார் ஜெயப்பிரியா, கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.