ஜல்லி போட்டீங்க, சரி...தார்சாலை எப்ப போடுவீங்க?
ஜல்லி போட்டீங்க, சரி...தார்சாலை எப்ப போடுவீங்க?
வாகன பெருக்கம் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில் சாலை வசதி என்பது நகர பகுதியில் இன்றியமையாததாகிறது. அந்த சாலை வசதி கிடைக்காமல் இருந்தாலோ, பாதியில் தடைபட்டு இருந்தாலோ மக்கள் பாடு திண்டாட்டம்தான்.
தார்சாலைக்கு ஜல்லிக்கற்கள்
இங்கேயும் அப்படித்தான், கோவை மாநகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்ட காளப்பட்டி காட்டூர் வீதியில் உள்ள சரஸ்வதி கார்டன் பகுதியில் தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் 6 மாதத்திற்கு மேல் ஆகியும், இதுவரை தார்ச்சாலை அமைக்கவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, நிலைதடுமாறி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே தார்சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மரங்கள் அகற்றம்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கு தார்சாலை வசதி செய்து தருவதாக கூறி, இங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள். அனைத்து வீடுகளின் வாசல்களின் முன்பு போடப்பட்டு இருந்த கான்கிரீட் தளங்களையும் உடைத்தனர். பின்னர் தார்ச்சாலை அமைக்க ஜல்லிக்கற்களை கொண்டு வந்து கொட்டினார்கள்.
ஆனால் மாதக்கணக்கில் ஆகியும், தார்சாலை மட்டும் அமைக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். இதனால் ஜல்லி போட்டீங்க, சரி...தார்சாலை எப்ப போடுவீங்க? என்று கேள்வி எழுப்பி வருகிறோம். எனவே விரைவாக தார்சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.