புதூர் மாரியம்மன் கோவிலில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பூமி பூஜை


புதூர் மாரியம்மன் கோவிலில்   திருமண மண்டபம் கட்டுவதற்காக பூமி பூஜை
x

புதூர் மாரியம்மன் கோவிலில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பூமி பூஜையைதுணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே புதூர் மாரியம்மன் கோவிலில் ரூ.2 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு திருமண மண்டபம் கட்டப்பட உள்ள இடத்தில் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழமை வாய்ந்த கோவில்கள் புதுபொலிவு பெற்று வருகிறது. கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதூர் மாரியம்மன் கோவிலில் சரவணன் எம்.எல்.ஏ. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. மேலும் ஜவ்வாதுமலையில் உள்ள பழமை வாய்ந்த கோவில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார் ஒன்றியக்குழு தலைவர்கள் சுந்தரபாண்டியன், அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் பவ்யாஆறுமுகம் பேரூராட்சித் தலைவர் செல்வபாரதி உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story