புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்: 2 வார்டர்கள் பணியிடை நீக்கம்


புழல் சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம்: 2 வார்டர்கள் பணியிடை நீக்கம்
x

புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் காரணமாக 2 வார்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புழல்,

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ஜெயந்தி(வயது 32) என்பவர் 2022-ம் ஆண்டு சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில் நந்தம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று முன்தினம் கைதிகளுக்கு வழங்கப்பட்ட வேலைகளை ஜெயந்தி செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு பாதுகாப்பாக சிறை பெண் காவலர்கள் (வார்டர்கள்) கனகலட்சுமி, கோகிலா ஆகியோர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தப்பி ஓட்டம்

மாலை 3 மணியளவில் பெண் கைதி ஜெயந்தி, பார்வையாளர் அறை அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக வார்டர்களுக்கு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு நைசாக சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். 5.30 மணி அளவில் பெண் கைதிகளை சிறை காவலர்கள் எண்ணி பார்த்தனர்.

அப்போது கைதி ஜெயந்தி மட்டும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோதுதான், ஜெயந்தி நுழைவு வாயில் வழியாக வெளியே தப்பிச்சென்றது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண் கைதியை தேடி வருகிறார்.

இந்த நிலையில் பெண் கைதி ஜெயந்தி தப்பி ஓடிய நிலையில், அப்போது பாதுகாப்பு பணியில் மந்தமாக ஈடுபட்டு இருந்ததாக பெண் வார்டர்களான கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை துறை தலைவர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். அதன்படி இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு மிகுந்த புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story