முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் சாலையோர தள்ளுவண்டி கடை நடத்த அனுமதி
முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் சாலையோர தள்ளுவண்டி கடை நடத்த அனுமதி -தமிழக அரசு உத்தரவு.
சென்னை,
மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மண்டல, வார்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை உள்ளபோது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை, விற்பனைக்கு அனுமதி இல்லாத இடங்களில் இருந்து கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யும்போது ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் தொழில் செய்து வந்த இடங்களுக்கு அருகிலேயே கடை ஒதுக்கீடு வழங்குவதில் முன்னுரிமை.
மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு அருகில் விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாத்தல் மற்றும் தெருவோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தெருவோரத்தில் வியாபாரம் செய்வதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
இதற்கு உரிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து நகர விற்பனை குழுக்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு செயலாளர் இரா.ஆனந்தகுமார் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவித்து உள்ளார்.