பாதையின் குறுக்கே நிறுத்தப்படும் வாகனங்களால் மாற்றுத்திறனாளிகள் அவதி


பாதையின் குறுக்கே நிறுத்தப்படும் வாகனங்களால் மாற்றுத்திறனாளிகள் அவதி
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பாதையின் குறுக்கே நிறுத்தப்படும் வாகனங்களால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்

கலெக்டர் அலுவலகம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க அவர்களை கலெக்டர் அலுவலக தரைத்தளத்திலேயே அமர வைத்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட கலெக்டர் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெறுகிறார். இது மாற்றுத்திறனாளிகளுக்கு சற்று மனநிறைவை அளித்தாலும் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்ல தினம், தினம் அல்லல்பட்டு வருகின்றனர்.

விதிமீறும் வாகனங்கள்

கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வுதள பாதையில் எளிதாக சென்று வர முடியாத வகையில் சிலர் பாதையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். சில சமயங்களில் அங்கு அரசுத்துறையின் 4 சக்கர வாகனங்களும் மற்றும் அரசியல் கட்சியினரின் வாகனங்களும் நிறுத்தப்பட்டு வருகின்றன.

அங்கு நோ-பார்க்கிங் பலகை வைத்துள்ள போதிலும் சிலா் அதை பொருட்படுத்தாமல் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் இதை கண்டுகொள்வதில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் சாய்வுதள பாதை வழியாக செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு படிக்கட்டு வழியாகவே சென்று வரும் அவல நிலை உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே மாற்றுத்திறனாளிகளின் நலனில் மாவட்ட கலெக்டர் தனி அக்கறை செலுத்தி அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வுதள பாதை வழியாக அவர்கள் சிரமமின்றி சென்றுவர ஏதுவாக அங்கு விதிகளை மீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story