மாலை நேரங்களில் நடமாடும் மலைப்பாம்புகள்
கல்வராயன்மலை சாலைகளில் மாலை நேரங்களில் நடமாடும் மலைப்பாம்புகள் வாகன ஓட்டிகள் அச்சம்
மூங்கில்துறைப்பட்டு
கல்வராயன்மலையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. பெரிய அளவிலான மலைகளும் உள்ளன. இங்கு வன விலங்குகள் மற்றும் பறவைகள் வசித்து வருகின்றன. குறிப்பாக மான், கரடி, முயல், காட்டெருமை, குரங்கு, மயில் மற்றும் மலைப்பாம்பு உள்ளிட்டவை அதிகளவில் வசித்து வருகின்றன. இவற்றில் குரங்கு, காட்டெருமை, மான் ஆகிய விலங்குகள் அவ்வப்போது இரை தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது மலைபாம்புகளும் கிராம பகுதிகளுக்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் மலை பாம்புகள் சாலையை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர். சிலர் சாலையை கடக்க முயலும் போது மலைப்பாம்பு வாகனங்களில் அடிபட்டு செத்து விடாமல் இருப்பதற்காக மனிதநேயத்தோடு அவற்றை பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டு விடுகிறார்கள். சிலர் மலை பாம்பு சாலையை கடந்து செல்லும்போது செல்போன்களில் வீடியோ பதிவு செய்து மற்றும் புகைப்படம் எடுத்தும் செல்வதை காண முடிகிறது. வானங்களில் மலைப்பாம்புகள் சாலையில் நடமாடுவதை தடுக்கவும், அப்படி சாலையை கடக்க முயலும்போது அவை வாகனத்தில் அடிபட்டு செத்து மடிவதையும் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.