முறைகேட்டை தடுக்க கொப்பரை மூட்டைகளில் கியூ ஆர் கோடு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முறைகேட்டை தடுக்க கொப்பரை மூட்டைகளில் கியூ ஆர் கோடு ஒட்டப்படுவதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்
ஆனைமலை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முறைகேட்டை தடுக்க கொப்பரை மூட்டைகளில் கியூ ஆர் கோடு ஒட்டப்படுவதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கொப்பரை தேங்காய்
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே தேங்காய் ஏற்றுமதி பாதித்தது. மேலும் வரத்து அதிகரித்ததால் தேங்காய் விலை குறைந்தது. எனவே தேங் காய்க்கு போதிய விலை கிடைக்காத நிலையில் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
இதைத்தொடர்ந்து, செஞ்சேரி, நெகமம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டன.
இது குறித்து ஆனைமலை ஒழுங்குமுைற விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:-
கொப்பரை தேங்காயில் ஈரம் 6 சதவீதத்திற்கும் கீழ் இருக்க வேண்டும். கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.105.90 என அரசு நிர்ணயம் செய்து உள்ளது.
முறைகேடு நடப்பதை தடுக்க விவசாயிகள் கொண்டு வரும் 50 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய் மூட்டைகளில் கியூ ஆர் கோடு ஒட்டப்படுகிறது. அதில் விவசாயிகளின் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் ஆகியவை பதிவு செய்யப்படும்
நடவடிக்கை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குடோன்களில் கொப்பரை சேமித்து வைக்கப்படுகிறது. அதை விற்பனை செய்யும் போது புகார்கள் ஏதும் இருந்தால் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அதை கொண்டு வந்த விவசாயி யார்?, சரி பார்த்த அதிகாரி யார்? எந்த மையம் என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் முறைகேடு ஏதும் நடைபெற்று இருந்தால் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.