சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களுக்கு தரமான ஆடைகள், கையுறைகள் வழங்க வேண்டும்


சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களுக்கு தரமான ஆடைகள், கையுறைகள் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரமற்ற தொழில் செய்பவர்களுக்கு தரமான ஆடைகள் மற்றும் கையுறைகள் வழங்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கண்காணிப்பு குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சுகாதாரமற்ற தொழில்புரியும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் இதர துறைகளின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனைத்து பணியாளர்களுக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைத்திட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மாதந்தோறும் மருத்துவமுகாம்

சுகாதாரமற்ற தொழில்புரியும் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்தும் அவர்தம் குடும்பத்தினரின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்த அவர் சுகாதாரமற்ற தொழில்புரிபவர்களுக்கு தரமான ஆடைகள், போதுமான அளவில் கையுறைகள் வழங்கி அவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தி உடல்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்ட கலெக்டர் அவர்களது குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கவியரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் சுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், கோட்டாட்சியர் பவித்ரா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், பழனி, மகேஷ், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்புமணிமாறன், அரசு சிறப்பு வக்கீல் தண்டபாணி, நகராட்சி ஆணையாளர் குமரன், துப்புரவு ஆய்வாளர் கண்ணதாசன், தனி தாசில்தார்கள் (ஆதிதிராவிடர் நலன்) ராஜ், மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story