அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு


அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு
x

அங்கன்வாடி மையங்களில் உணவின் தரத்தை உறுதி செய்ய பிறகே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையம், போதை ஒழிப்பு மையம், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்குள்ள மூதாட்டிகளிடம் வழங்கப்பட்டு வரும் வசதிகள், உணவுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் கல்விமுறை, திறன் மேம்பாடு, மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து பராமரிப்பாளர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

போதை மறுவாழ்வு மையம்

பின்னர் நாமக்கல் கருப்பட்டிபாளையம் போதை மறுவாழ்வு மையத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு அங்குள்ளவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் மற்றும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தார். இதுவரை இம்மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, சுமார் 52-க்கும் மேற்பட்டவர்கள் போதை பழக்கத்திலிருந்து மீண்டு வந்து உள்ளனர்.

எனவே போதை பழக்கத்திற்கு அடிமையான 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் இம்மையத்தில் இலவச சிகிச்சை பெற பொதுமக்கள் 81480 39073 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 63826 13551 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு சிகிச்சைக்கான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து, நாமக்கல் உழவர் சந்தை மாலை நேரத்தில் செயல்படுவதை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை, லாபம் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். முன்னதாக நல்லிபாளையத்தில் அரசு நிதியுதவி பெறும் கலைமகள் தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்குதற்காக தயார் செய்யப்பட்ட உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

அங்கன்வாடி மையம்

நாள்தோறும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை, ஊட்டச்சத்துடன் சுகாதாரமான முறையில் தயாரிப்பதுடன், உணவின் தரத்தினை உறுதி செய்த பின்னரே குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும், அங்கன்வாடி மையத்தினை நாள் தோறும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சத்துணவு மைய அமைப்பாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உள்பட அங்கன்வாடி பணியாளர்கள், முதியோர் இல்லம் பராமரிப்பாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story