நடமாடும் வாகனம் மூலம் உணவு பொருட்கள் தர பரிசோதனை


நடமாடும் வாகனம் மூலம் உணவு பொருட்கள் தர பரிசோதனை
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடமாடும் ஆய்வு வாகனம் மூலம் நடத்திய மாதிரி சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் அதிகளவில் சேர்த்து உணவு பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடமாடும் ஆய்வு வாகனம் மூலம் நடத்திய மாதிரி சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் அதிகளவில் சேர்த்து உணவு பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.

நடமாடும் ஆய்வு வாகனம்

உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை வழங்கும் வகையில் நடமாடும் ஆய்வு வாகனம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளது. கடந்த 10-ந் தேதி தொடங்கி இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடமிருந்து உணவு பொருட்களை பெற்று அவற்றின் தரத்தை பரிசோதித்து உடனடியாக ஆய்வு முடிவுகளை வழங்கி வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய குடியிருப்பு பகுதிகள், அதிக கடைகள் உள்ள பகுதிகள் போன்ற இடங்களில் இந்த நடமாடும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு பொதுமக்கள் அளிக்கும் பால், குளிர் பானம், மசாலா பொருட்கள், பேக்கரி உணவுகள், பலகாரங்கள் உள்பட அனைத்து உணவு பொருட்களையும் இந்த வாகனத்தில் உள்ள வல்லுனர்கள் பெற்று அதன் தரத்தை பரிசோதித்து வருகின்றனர்.

753 உணவு மாதிரிகள் சோதனை

அந்த வாகனத்தில் உள்ள அதிநவீன கருவிகளை பயன்படுத்தி, உணவு பொருளின் தரம், கலப்படம் உள்ளதா சாப்பிட தகுதியானதா அதில் என்ன குறை உள்ளது என்று பரிசோதித்து உடனடியாக அறிக்கை வழங்கி வருகின்றனர். இதுதவிர உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளில் உணவு பொருட்களை மாதிரி எடுத்து சோதனை செய்து குறை உள்ளதா? என்று கண்டறிந்து வருகின்றனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கண்ட ஆய்வு வாகனம் மூலம் கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை 753 உணவு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. இதில் 12 உணவு பொருட்களில் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை நோட்டீஸ்

குறிப்பாக பச்சை பட்டாணியில் பச்சை வண்ணத்தினை அதிகளவில் கலந்து உடலுக்கு தீங்கு ஏற்படும் வகையில் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உப்பு பாக்கெட்டில் அயோடின் சத்து குறைவாக இருந்தது கண்டறியப்பட்டு அதனை கைப்பற்றி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதுதவிர, பாலில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி, சிக்கன் 65, கேக், ரோஸ்மில்க், சிப்ஸ் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக வண்ணம் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்த உணவு பொருட்களை கைப்பற்றி அழித்த உணவு பாதுகாப்புத்துறையினர் இதுதொடர்பாக மேற்கண்ட 12 கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளனர். தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுக்கு சந்தேகத்திற்கு இடமான உணவு என தெரிந்தால் சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம் என்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story