கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்


கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
x

விவசாய நிலங்களை பாதிக்கும் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்


விவசாய நிலங்களை பாதிக்கும் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜய முருகன், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் தாமதமாக வரும் நிலை தொடர்வதால் மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் சிவகாசி அருகே பாறைப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கல்குவாரி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளை போலீசார் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார். இதேபோன்று அருப்புக்கோட்டை தாலுகாவில் புலியூரான் கிராமத்திலும் கல் குவாரியால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பயிர்கள் நாசம்

இதற்கு பதில் அளித்த கலெக்டர், இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள், யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்கள் நாசமாகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே 250 விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கப்படாத நிலை உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளித்த கலெக்டர் வருகிற 26-ந் தேதி வனத்துறை, வேளாண்மை துறை மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடத்தி அதில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

கொள்முதல்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விலைக்கு பருத்தி, கடலை, உளுந்து, பாசிப்பயறு போன்ற விளை பொருள்களை மாவட்ட நிர்வாகம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் மாவட்டத்தில் 300 மெட்ரிக்டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் பத்மாவதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராஜலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் கோவில் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story