கிணத்துக்கடவு பகுதியில் 4-வது நாளாக கல்குவாரிகள் வேலை நிறுத்தம்

கிணத்துக்கடவு பகுதியில் 4-வது நாளாக கல்குவாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் 4-வது நாளாக கல்குவாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
4-வது நாளாக வேலை நிறுத்தம்
கிணத்துக்கடவு அருகே நெம்பர் 10 முத்தூர், சொக்கனூர், பொட்டையாண்டி புறம்பு, வடபுதூர், அரசம்பாளையம், வடசித்தூர், காரச்சேரி தேவராயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் 35 கல் குவாரிகள் உள்ளன.இதை நம்பி 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கிருந்து சைஸ்கள் போல்டர், கல்லு கால், எம் சாண்ட், பிசாண்ட் ஆகியவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26 -ந் தேதி முதல் இந்தப் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் கனிமவளத் துறை அதிகாரிகள் கெடுபிடி விதித்து வருவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் தற்போது கோவை உள்ளிட்ட பல இடங்களில் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்குவாரி உரிமையாளர்கள் கூறியதாவது:- கிணத்துக்கடவு பகுதியில் தமிழ்நாடு கல்குவாரி சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி எங்கள் குவாரிகளில் உற்பத்தியை நிறுத்தி உள்ளோம். இன்றுடன் (நேற்று) 4-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
கல்குவாரிகளுக்கு வரும் கனிமவளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்துள்ளதாக கூறி பல மடங்கு உயர்த்தி அபராதத்தை விதிக்கின்றனர். அதேபோல் கல்குவாரி தொடங்கும் போது உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் வெளியூர் நபர்களின் எதிர்ப்பை நம்பி கல்குவாரிக்கு அனுமதி தர மறுக்கின்றனர். இதனால் கல்குவாரி உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். வேலைநிறுத்தம் குறித்து அரசு அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாத சூழ்நிலையில் எங்கள் தொழிலுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரி செய்ய தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கல்குவாரிகளில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி மீண்டும் கல்குவாரிகள் எளிதாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






