குவாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
மாவட்டம் முழுவதும் குவாரி உரிமையாளர்கள் போராட்டம் இன்று வாபஸ் பெறப்படுவதாக சங்க செயலாளர் நாராயணபெருமாள்சாமி கூறினார்.
சிவகாசி,
மாவட்டம் முழுவதும் குவாரி உரிமையாளர்கள் போராட்டம் இன்று வாபஸ் பெறப்படுவதாக சங்க செயலாளர் நாராயணபெருமாள்சாமி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
குவாரிகள் மற்றும் கிரசர் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும், கனிமவள திருட்டுகளை தடுக்க வேண்டும், குற்றச்செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 26-ந் தேதி முதல் குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சிவகாசியில் விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் நாராயணபெருமாள்சாமி தலைமை வகித்தார். தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தனபாலன் வரவேற்றார். ஆலோசனைக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
பின்னர் சங்க செயலாளர் நாராயணபெருமாள்சாமி கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் குவாரிகள் செயல்படாததால் கட்டுமான தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். கனிம வள திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிவகாசி நகர் காவல் நிலையத்தில் கனிம வள திருட்டில் ஈடுபட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எந்தவித அபராதம் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் நலன் கருதி எங்களது போராட்டம் 2-ந் தேதி (அதாவது இன்று) வாபஸ் பெறப்படுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.