காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது:சென்னை செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்


காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது:சென்னை செல்ல கடலூர் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்
x

காலாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குவிந்தது. இதையடுத்து கூடுதலாக 20 பஸ்கள் இயக்கப்பட்டன.

கடலூர்

காலாண்டு விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9-ந்தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவித்தாலும், மற்ற வகுப்பு மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக கடலூரில் இருந்து நேற்று புறப்பட்டு தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கினர்.

பயணிகள் குவிந்தனர்

இதேபோல் தொடர் விடுமுறை காரணமாக ஊருக்கு வந்த பொதுமக்களும், தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்ல தொடங்கினர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் இருந்து படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு சென்று வருகின்றனர். இவர்களும் நேற்று சென்னைக்கு செல்ல தொடங்கினர். இதனால் கடலூர் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். மாலை 3 மணிக்கே கடலூர் பஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் சென்னை செல்லும் அரசு பஸ்களில் முண்டியடித்தபடி ஏறிச்சென்றனர். குளிர்சாதன பஸ்சில் இருக்கை இல்லையென்றாலும் சிலர் கீழே அமர்ந்தபடி பயணம் செய்தனர்.

முண்டியடித்தபடி ஏறினர்

பஸ் வர, வர கூட்டம் நிரம்பியது. இதனால் வந்த வேகத்தில் பஸ் புறப்பட்டு சென்றது. சிலர் பணிமனைக்கு வந்து காத்திருந்தனர். பஸ் வெளியே வரும் போது ஒருவரையொருவர் முண்டியடித்தபடி ஏறிச்சென்றனர். சிலர் சென்னைக்கு செல்லும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து, தனியார் பஸ்சில் ஏறி புதுச்சேரி சென்று, அங்கிருந்து சென்னைக்கு சென்றனர். இதனால் புதுச்சேரி செல்லும் தனியார் பஸ்களும் வந்த வேகத்தில் பயணிகளை ஏற்றிச்சென்றது.

சென்னை உள்ளிட்ட பிற இடங்களுக்கு பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டதால் கடலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கூடுதலாக 20 பஸ்கள் இயக்கம்

இது பற்றி கடலூர் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னைக்கு வழக்கமாக 60 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது விடுமுறை முடிந்து மாணவர்கள் செல்வதால் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 20 பஸ்களை சென்னைக்கு இயக்கி இருக்கிறோம். மேலும் பஸ்கள் வர, வர அதை சென்னைக்கு திருப்பி விடுகிறோம். பொதுமக்கள் சிரமம் இன்றி சென்று வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.


Next Story