பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் அறிவிப்பு


பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக  மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் அறிவிப்பு
x
மதுரை

செருப்பு வீச்சு சம்பவத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரிய பா.ஜனதா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், பா.ஜனதாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

அமைச்சருடன் சந்திப்பு

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பா.ஜனதாவினர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜனை அவரது இல்லத்தில் டாக்டர் சரவணன் நேரில் சந்தித்து பேசினார்.

கார் மீது செருப்பு வீச்சு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். பின்னர் வெளியே வந்த சரவணன், பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

மன்னிப்பு கேட்டேன்

விமான நிலையத்தில் விரும்ப தகாத நிகழ்வுகள் நடந்து விட்டது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து தவறாக புரிந்து ெகாள்ளப்பட்டது. பா.ஜனதாவில் சிறுப்பான்மையினருக்கு எதிரான போக்கு உள்ளது. மன உளைச்சலோடு பயணித்து கொண்டிருக்கும் நிலை இருந்தது. நானே இதை சில இடங்களில் சொல்லி இருக்கிறேன். அமைச்சர் கார் மீதான இந்த தாக்குதல் எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் தூக்கம் வரவில்லை.

அமைச்சரை போனில் தொடர்பு கொண்டு சந்திக்கலாமா? என்று கேட்டேன். பின்னர் அவரை சந்தித்து எனது வருத்தத்தை தெரிவித்தேன். தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்ட விதம் குறித்து அமைச்சரிடம் தெரிவித்தேன். அவரிடம் நான் மன்னிப்பும் கேட்டு விட்டேன். இப்போது எனது மனது நிம்மதியாக உள்ளது.

தி.மு.க. என் தாய் வீடு

இனி நான் பா.ஜனதாவில் தொடர மாட்டேன். மத அரசியல், வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அது எனக்கு ஒத்து வராது. காலையில் நான் ராஜினாமா கடிதம் அனுப்புவேன். தி.மு.க.வில் இணைந்தாலும் தவறில்லை. அது எனது தாய் வீடு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story