மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினர் கைதான 'கல்யாண ராணி' பரபரப்பு வாக்குமூலம்


மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால்   எனது ஆபாச வீடியோக்களை   வெளியிடுவேன் என மிரட்டினர்  கைதான கல்யாண ராணி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:46 PM GMT)

மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டினர் கைதான ‘கல்யாண ராணி’ பரபரப்பு வாக்குமூலம்

நாமக்கல்

பரமத்திவேலூர், செப்.27-

'மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால் எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன்' என கும்பல் மிரட்டியதாக கைதான 'கல்யாண ராணி' சந்தியா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுப்பெண் மாயம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் மூலம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 2 நாட்களில் புதுப்பெண் சந்தியா வீட்டில் இருந்த நகை, துணிமணிகளுடன் மாயமானார். இதுகுறித்து வேலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சந்தியாவுக்கும், வெங்கரையை சேர்ந்த ஒருவருக்கும் புரோக்கர் தனலட்சுமி மூலம் திருமண ஏற்பாடுகள் நடப்பதை தனபால் அறிந்தார். இதையடுத்து திருமணத்திற்காக திருச்செங்கோடு வந்த சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, உறவினர் அய்யப்பன், ஜெயவேல், கவுதம் ஆகிய 5 பேரையும் உறவினர்கள் உதவியுடன் பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.

4 பேர் கைது

போலீசாரின் விசாரணையில், சந்தியா பல புரோக்கர்கள் மூலம் தனபால் உள்பட 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், 7-வது திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதற்கிடையில் அய்யப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரை போலீசார் சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கிருந்து அய்யப்பன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து கல்யாணராணி சந்தியா, தனலட்சுமி, கவுதம், ஜெயவேல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடைய கூட்டாளிகளான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ரோஷினி, ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய விருதுநகர் மாவட்டம் மேட்டமலையை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆபாச வீடியோக்கள்

கைதான சந்தியா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமண புரோக்கர் பாலமுருகன்தான் என்னை அடித்து மிரட்டி திருமணம் செய்து வைக்க அழைத்து வந்தார். 6-க்கும் மேற்பட்ட திருமணம் செய்துள்ளேன். திருமணம் முடிந்ததும் என்னை அங்கிருந்து தப்பித்து வருமாறு கூறி காரில் அழைத்து வந்துவிடுவார்.

பின்னர் கொண்டு வந்த பொருட்களை பிடுங்கி கொண்டு சிறிய‌ தொகையை மட்டும் தருவார். பின்னர் அதையும் மிரட்டி வாங்கி கொள்வார். அவரது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மோசடி திருமணங்களுக்கு சம்மதிக்காவிட்டால், அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.

அதனால்தான் நான் இந்த மோசடி திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, மேலும் 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர். மோசடி திருமணத்தில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்து கொள்வார்கள். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.

நெருங்கி பழக வேண்டும்

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள். என்னுடைய அக்காள், மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள். ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பே அக்காள், மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பெண் பார்க்க திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும். அப்படி பேசும்போது செல்போன், பட்டுசேலை, பணம், நகை என ஆசையாக கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும். திருமணம் முடிந்ததும், இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும்.

முதல் இரவு முடிந்ததுமே தப்பி செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளையை அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும். இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார் அவமானங்களுக்கு பயந்து பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை. இதை புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் நாங்கள் திருமண மோசடிகளை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Next Story