வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கரூர் வெங்கமேடு என்.எஸ்.கே. நகரில் நேற்று கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவிக்கையில், செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளில் வெறிநோய் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தவும், அதன் மூலம் வெறிநோய் தொற்று ஏற்பட வண்ணம் தடுக்கவும், பொது மக்களுக்கு இந்த நோய் குறித்த சரியான புரிதலையும் முறையான விழிப்புணர்வினையும் ஏற்படுத்தவும் மற்றும் இது குறித்த செயல்பாடுகளும், இந்த முகாம்கள் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இம்முகாம்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளது. வருகிற ஜனவரி 23-ந்தேதி வரை மொத்தம் 12 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிராணிகள் நலன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் தடுப்பு முறைகளை கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் 1580 அளவுகள் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு தயார்நிலையில் உள்ளது, என்றார். பின்னர் வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.