பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை கம்பத்தில் கட்டிவைத்த கிராம மக்கள்


பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை   கம்பத்தில் கட்டிவைத்த கிராம மக்கள்
x

பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை சுமார் 10 கி.மீ. விரட்டி பிடித்து, கம்பத்தில் கிராம மக்கள் கட்டி வைத்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை சுமார் 10 கி.மீ. விரட்டி பிடித்து, கம்பத்தில் கிராம மக்கள் கட்டி வைத்தனர்.

நகைபறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. அவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது.52).

இவர் அம்மன்புரம் அருகே உள்ள மளிகைக்கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு நடந்து வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.

உடனே ராஜலட்சுமி 'திருடன், திருடன்...' என கூச்சலிட்டார். எனவே அவர்கள் 2 பேரையும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கார் மூலம் கிழக்கு கடற்கரைச் சாலையில் விரட்டிச்சென்றனர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை விரட்டினர். அப்போது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டுவிட்டு ஒருவன் தப்பி ஓடினான். மற்றொருவன் பிடிபட்டான்.

பிடிபட்ட நபரை அழைத்து வந்து தர்ம-அடி கொடுத்து ஊருக்கு நடுவே உள்ள கம்பத்தில் கிராமத்தினர் கட்டி வைத்தனர். பின்னர் சாயல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மான் ஆகியோர் விசாரணை செய்ததில், பிடிபட்டவர் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (24) என்றும், தப்பிஓடிய நபர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த விமல் என்பதும் தெரியவந்தது.

பின்னர் சக்திவேலை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, விமலை தேடிவருகின்றனர்.


Next Story