பந்தய சேவல் விற்பனை மும்முரம்
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி பந்தய சேவல் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
பொள்ளாச்சி,
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி பந்தய சேவல் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
சேவல் விற்பனை
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ரேக்ளா பந்தயம், சேவல் சண்டை உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். சேவல் சண்டை நடத்துவதற்கு போலீசார் கெடுபிடி இருந்தாலும், ஆங்காங்கே கிராமங்களில் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி காந்தி வாரச்சந்தையில் நேற்று பந்தய சேவல் விற்பனை நடைபெற்றது.
இதற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, தாராபுரம், குண்டடம், உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பந்தய சேவல்களை வாங்குவதற்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமானோர் வந்தனர். இதன் காரணமாக வார சந்தை களை கட்டியது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
விலை நிர்ணயம்
பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இருப்பினும் போலீசாருக்கு தெரியாமல் ஆங்காங்கே நடத்தப்படுகிறது. பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை பந்தய சேவல் விற்பனை நடைபெறும். பொங்கல் பண்டிகை வருவதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
சேவல்களில் கம்பீரம் மற்றும் அவற்றை மோத விட்டு அதன் ஆக்ரோஷத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் பந்தய சேவல் விற்பனை ஆனது. ஆனால், நேற்று ஒரு சேவல் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.