வெள்ளந்தாங்கியம்மன் ஏரியை தூர்வாரும் பணியில் பயன்படுத்தப்பட்ட லாரிகளில் ஜாக்கி, ரேடியோ திருட்டு


பெரம்பலூர் வெள்ளந்தாங்கியம்மன் ஏரியை தூர்வாரும் பணியில் பயன்படுத்தப்பட்ட லாரிகளில் ஜாக்கி, ரேடியோ திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

வெள்ளந்தாங்கியம்மன் ஏரி

பெரம்பலூரில் வெள்ளந்தாங்கியம்மன் ஏரி எனப்படும் கீழேரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, மதகுகளை சரி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஒரு மாதமாக மாவட்ட நிர்வாகம் ஏரியில் அந்த பணிகளை செய்து தூய்மைப்படுத்தி வருகிறது.

ஏரியை தூர்வாரும் பணியில் 3 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டிரைவர்கள் வேலை முடிந்து லாரிகளை ஏரியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

ஜாக்கி, ரேடியோ திருட்டு

நேற்று காலை வேலைக்கு வந்த அந்த டிரைவர்கள் தங்களது லாரிகளை பார்த்தனர். அப்போது 3 லாரிகளிலும் ரேடியோ செட்டுகளும், 2 லாரிகளில் பழுது நீக்க பயன்படுத்தும் ஜாக்கி செட்டுகளும் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து லாரிகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கஞ்சா புழக்கம்

வெள்ளந்தாங்கியம்மன் ஏரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவற்றின் புழக்கம் அதிகமாக இருந்து வருவதாக ஏரியை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புகையிலை பொருட்கள், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான சில இளைஞர்கள் வீட்டிற்கு தெரியாமல் அதனை பயன்படுத்துவதற்கு ஏரியே கதி என்று கிடக்கின்றனர். இளைஞர்களை அந்த பழக்கத்தில் விடுபட போலீசார் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். புகையிலை பொருட்கள், கஞ்சாவை முற்றிலும் தடுக்க போலீசாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரியில் கிடந்த கோவில் உண்டியல்

அதே ஏரியில் பூட்டு உடைக்கப்பட்ட கோவில் உண்டியல் ஒன்று கிடந்தது. ஏற்கனவே பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்களில் உண்டியல் உள்ளிட்டவை மர்ம ஆசாமிகள் குறி வைத்து திருடி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் ஏரியில் கிடந்த உண்டியல் ஏற்கனவே கோவிலில் திருட்டு போன உண்டியலாக இருக்கலாம் அல்லது வேறு எங்கேயாவது மர்ம ஆசாமிகள் கோவில் உண்டியலை திருடி வந்து ஏரியில் வைத்து உடைத்து பணத்தை எடுத்து விட்டு, அங்கு நின்று கொண்டிருந்த லாரிகளில் ரேடியோ செட், ஜாக்கி செட் ஆகியவற்றை திருடி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.


Next Story