மண், தூசி கலந்த ராகி வினியோகம்
நீலகிரியில் உள்ள ரேஷன் கடைகளில் மண், தூசி கலந்த ராகி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கூடலூர்
நீலகிரியில் உள்ள ரேஷன் கடைகளில் மண், தூசி கலந்த ராகி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தரமற்ற ராகி
தமிழகத்தில் சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் மலைப்பிரதேசங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ராகி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ராகி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்கள் வழக்கமாக பொதுமக்கள் வாங்கும் அரிசியில் 2 கிலோ குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக ராகி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று ஜூலை மாத தொடக்கம் என்பதால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் சென்றனர். அப்போது 2 கிலோ ராகியும் வழங்கப்பட்டது. அதை வாங்கி வந்து சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதில் தூசி, மண் கலந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கூடுதலாக அரிசி
இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக தரமற்ற ராகி வழங்குவதாக புகார் எழுந்து உள்ளது. எனவே, அரிசியின் அளவை குறைத்து விட்டு ராகி வழங்குவதற்கு பதிலாக, வழக்கம்போல் கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, தரமற்ற ராகியை வாங்கி வந்து சுத்தம் செய்தால் ஒரு கிலோவில் ¼ கிலோ அளவுக்கு தூசி, மணல் உள்ளது.
பின்னர் மீதமுள்ள ராகியை தண்ணீரில் கழுவி காய வைக்க வேண்டிய நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குளிர்ந்த காலநிலையில் ராகியை உடனடியாக உலர்த்த முடிவதில்லை. மேலும் தரமற்றதாக உள்ளதால் பயன்படுத்தவும் முடியவில்லை. எனவே, அதற்கு பதிலாக கூடுதலாக அரிசி வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ராகி குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பான புகார்கள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றனர்.