ராகுல்காந்தி இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பார் -கே.எஸ்.அழகிரி பேட்டி


ராகுல்காந்தி இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பார் -கே.எஸ்.அழகிரி பேட்டி
x

ராகுல்காந்தி இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது. ராகுல்காந்தி நாளை (இன்று) அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்ல இருக்கிறார்.

பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை குறிவைத்து அதன் தலைவர்கள் மீது இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கிறார். இந்திராகாந்தி மீதும் இது போன்ற முயற்சி எடுக்கப்பட்டது. ராகுல்காந்தி மோடியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பார். மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்

நாளை ராகுல்காந்தி விசாரணைக்கு செல்லும் போது, டெல்லியில் இருக்கிற அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஏராளமான தேசிய தோழர்கள் செல்ல இருக்கிறார்கள். அதே போன்று ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பும் அந்தந்த மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரள வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (இன்று) காலை சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு எதிராக எங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தூய்மையாக இருக்கிறது. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. கோர்ட்டு வேண்டுமானால் விசாரிக்கலாமே தவிர அமலாக்கத்துறை விசாரிப்பது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story