ராகுல்காந்தி நடைபயணம்: ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை


ராகுல்காந்தி நடைபயணம்: ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை
x

ராகுல்காந்தி நடைபயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ராகுல்காந்தி 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைபயணமானது கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தொடங்க உள்ளது. அங்கிருந்து புறப்படும் ராகுல்காந்தி நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து நாடு முழுவதும் இந்த நடைபயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நடைபயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை ராயப்பேட்டை தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தினர். நடைபயணத்துக்காக என்னென்ன முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story