பல்லடத்தில், கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் 200 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல்
பல்லடத்தில், கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் 200 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
பல்லடத்தில், கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் 200 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
மீன் கடைகளில் ஆய்வு
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடத்தில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள 2 மீன் கடைகளில் கெட்டுப்போன, அழுகிய நிலையில் இருந்த சுமார் 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-
அழுகிய, கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடைகளில் மீன் இறைச்சியை சரியான வெப்ப நிலையை காட்டும் குளிர்சாதனப்பெட்டியில் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும் சமைத்த மீன் இறைச்சியை, குளிர்சாதனப் பெட்டியில் இருப்பு வைத்து மீண்டும் சூடுபடுத்தி விற்பதை தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படும் மீன்களுக்கு தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு வைத்து விற்பனை செய்யக்கூடாது.
அறிவுறுத்தல்
மீன் வெட்ட பயன்படுத்தும் கத்தி, அரிவாள் போன்றவை துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பொறித்த மீனை பேப்பரில் வைத்து விற்பனை செய்யாமல் வாழை இலைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.